பொறுப்புக்கூறும் செயன்முறையை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும்: கனேடிய பிரதமர் வேண்டுகோள்

by Staff Writer 19-05-2020 | 5:49 PM
Colombo (News 1st) இலங்கையில் நீண்ட கால சமாதானம் மற்றும் செழிப்பினை உறுதி செய்யக்கூடிய வகையில், அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயன்முறையை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில், கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்ட விடயங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முக்கியமானது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். எனவே, அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் செயன்முறையை பின்பற்றுமாறு இலங்கைக்கு தான் மீண்டும் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நீதி, நல்லிணக்கம் மற்றும் அனைவரையும் உள்வாங்கும் பயணத்திற்கு கனடா இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார். இவை அனைத்தும் இலங்கையில் நீண்ட கால சமாதானம் மற்றும் செழிப்பினை உறுதி செய்யக்கூடிய விடயங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருட பூர்த்தியை முன்னிட்டு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். ​ நீதி நிலைநாட்டப்படுவதற்கு நீண்ட காலமாகலாம். எனினும், நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.