உத்தேச ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை: ICC தெரிவிப்பு 

by Staff Writer 19-05-2020 | 8:52 PM
Colombo (News 1st) ஹோமாகமவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பாக பரவலான கருத்துகள் வெளியாகி வரும் இத்தருணத்தில், அது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் ஆராய்ந்தது. புதிய சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பதற்கு இலங்கைக்கு 30 மில்லியன் டொலர் நிதியை ICC ஒதுக்கியுள்ளதாகவும் அந்தப் பணத்தை பயன்படுத்தாவிட்டால் அவர்கள் அதனை வேறு நாட்டிற்கு மைதானம் அமைக்க வழங்கிவிடுவார்கள் எனவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். அடிப்படை வசதிகளும் அபிவிருத்தியும் எந்தவொரு விளையாட்டிற்கும் அவசியம். என்றாலும், இவ்வாறான தருணத்தில் அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா என்பது குறித்து கடுமையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஸ தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவ்வாறே, இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் சகல தரப்பினருடனும் தொடர்புகொண்டு தீர்மானிக்க வேண்டியது பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலியாவை விடவும் இலங்கையில் தற்போதைக்கு அதிகமான மைதானங்கள் உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரான அர்ஜூன ரணதுங்க தனது அறிக்கையில் கூறியுள்ளார். அவற்றில் வரலாற்று சிறப்புமிக்க போட்டிகள் நடைபெற்றுள்ள அஸ்கிரிய மற்றும் மொரட்டுவ ஆகிய மைதானங்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அர்ஜூன ரணதுங்க, அவ்வாறான மைதானங்களை புனர்நிர்மாணம் செய்வதை விடுத்து சர்வதேச மைதான நிர்மாணத்திற்காக அதிகம் செலவழிக்க வேண்டியது அவசியமானதல்ல எனவும் கூறியுள்ளார். கடந்த 3 வருடங்களாக ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் ஒரு போட்டியே நடத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் தம்புளையில் ஒரு சர்வதேச போட்டி மாத்திரமே நடைபெற்றுள்ளதாகவும் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். தற்போதிருக்கும் சர்வதேச மைதானங்களில் ஆண்டுக்கு ஒரு சர்வதேச போட்டியாவது நடைபெறாவிடின் புதிதாக மைதானங்களை நிர்மாணிப்பதில் என்ன பயன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். புதிதாக மைதானங்களை நிர்மாணிப்பதற்கு பின்னால் அரசியல்வாதிகளை மகிழ்விக்கும் செயற்பாடுகள் இருப்பதாக அர்ஜூன ரணதுங்க சுட்டிக்காடியுள்ளார். இந்தத் தருணத்தில் புதிதாக மைதானம் நிர்மாணிக்க வேண்டியதில்லை என்பதே தனது தனிப்பட்ட கருத்து என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். கிரிக்கெட் நிறுவனத்திடம் பணம் அதிகம் இருக்குமானால், புதிதாக மைதானங்களை நிர்மாணிக்காது, கொரோனா பிரச்சினையால் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு அதனை வழங்கி உதவுமாறு சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்நிலையில், இந்த மைதான நிர்மாணம் தொடர்பில் எவ்வித இணக்கப்பாடுகளும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடக இணைப்பதிகாரி தெரிவித்தார்.