இலங்கைக்கு கடும்போக்குவாத அச்சுறுத்தல் உள்ளதாக வௌியாகும் தகவலில் உண்மை இல்லை: கமல் குணரத்ன

by Bella Dalima 19-05-2020 | 8:39 PM
Colombo (News 1st) இலங்கைக்கு கடும்போக்குவாத அச்சுறுத்தல் உள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரினால் விசேட அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. பாரிய அர்ப்பணிப்புகளால் நாட்டிற்கு கிடைத்துள்ள சமாதானத்தை எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்கும் வகையில், நிலையாகப் பேணுவதை அனைத்து வழிகளிலும் உறுதிப்படுத்துவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார். இதேவேளை, யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டபோது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக கடமையாற்றியிருந்தார். அவர் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்
யுத்தத்தில் வெற்றிபெற முடியும் என எவரும் நம்பவில்லை. எம்மிடம் அதிகளவானோரும் அதிக பலமும் இருந்தால், குறைந்த பலத்தைக் கொண்ட பயங்கரவாதிகளை ஏன் அழிக்க முடியாது என்ற எண்ணம் எனக்கிருந்தது. பயங்கரவாதிகளின் பலவீனங்களை நான் அறிந்திருந்தேன். எமது பலவீனங்களையும் அறிந்திருந்தேன். எனவே, இராணுவத்தினரை பலப்படுத்த வேண்டும் என பாதுகாப்புச் செயலாளரிடம் நான் கூறினேன். பலத்தை அதிகரிக்க வேண்டும். அதன் பின்னரே யுத்தம் செய்ய வேண்டும். கட்டளை அதிகாரிகளுள்ளனர். சிலருடன் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே, இதற்கான சுதந்திரம் எனக்கு வேண்டும் என கேட்டேன். அந்த தருணத்தில், பூரண சுதந்திரத்தை வழங்குகின்றேன், உங்களுக்கு தேவையானவற்றை செய்யுமாறு அவர் கூறினார். இராணுவத்தினரை ஒழுங்குபடுத்தி, போராட்ட முறையை மாற்றிய பின்னரே, யுத்தத்தை வெற்றிகொண்டோம். அந்த யுத்த முறையை பயங்கரவாதிகளால் எதிர்கொள்ள முடியாமல் போனது. வீதிகளை, நகரங்களைக் கைப்பற்றும் தேவை எனக்கு இருக்கவில்லை. பயங்கரவாதிகளைக் கொல்வதற்கான திட்டங்களை நான் வகுத்தேன். நாளாந்தம் எமது பக்கத்திலிருந்து 7, 8 பேர் மரணிப்பார்கள். பயங்கரவாதிகள் 20 பேரளவில் உயிரிழப்பார்கள். பயங்கரவாதிகள் மரணிக்கும் போது, முன்னோக்கி செல்வதற்கு நான் அவசரப்படவில்லை. எனினும், அவர்கள் பின்னோக்கிச் சென்றனர். இராணுவத்தினர் கட்டம் கட்டமாக முன்னேறினார்கள். பயங்கரவாதிகள் காணப்பட்ட பகுதிகள் குறைவடைந்தன.