தொடர்ந்தும் பலத்த மழை: மண்மேடு சரிந்ததால் இருவர் உயிரிழப்பு, கங்கைகள் பெருக்கெடுப்பு

தொடர்ந்தும் பலத்த மழை: மண்மேடு சரிந்ததால் இருவர் உயிரிழப்பு, கங்கைகள் பெருக்கெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 May, 2020 | 8:20 pm

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகிறது.

சில கங்கைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், அலுகல பகுதியில் சிறுவனொருவர் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொக்குபோத்தாகம தெரிவித்துள்ளார்.

வௌ்ள அபாயம் காரணமாக அவதானமிக்க பகுதிகளிலிருந்து மக்களை வௌியேற்றுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, பலத்த மழையினால் பலாங்கொடை நகர் நீரில் மூழ்கியுள்ளது. சில கால்வாய்களின் நீரோட்டம் தடைப்பட்டுள்ளதால் பலாங்கொடை பஸ் நிலையமும் சில வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளதாக பிரதேச செயலாளர் ஹேமந்த பண்டார தெரிவித்துள்ளார்.

வட்டவளை , தியகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது. மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளமையால் வட்டவளை நகரில் ஆற்றை அண்மித்த பகுதியில் உள்ள சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

பலத்த மழை காரணமாக நாவலப்பிட்டி – ஜயசுந்தரஓவிட்ட கிராமத்திலுள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

லிந்துலை பகுதியில் பாரிய கற்பாறையொன்று சரிந்து மக்கள் குடியிருப்பில் வீழ்ந்துள்ளது.

மலையகத்தின் சில வீதிகளூடான போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இரத்தினபுரி பகுதியில் களுகங்கையும் தவலம மற்றும் நெலுவ பகுதிகளில் கிங் கங்கையும் பெருக்கெடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இரத்தினபுரி நகரில் வாழும் மக்களையும் கிங் கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோரையும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோர்வூட் பகுதியில் களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் வௌ்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வௌ்ள நிலையை குறைப்பதற்காக, கழிமுகங்களை அகலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார். எனினும், நீர்பாசனத் திணைக்களத்திற்குட்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சாதாரண நிலையிலேயே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, களு கங்கையின் கிளை ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக புலத்சிங்கள, மில்லனிய, பாலிந்தநுவர மற்றும் மதுராவல ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, களுத்துறை – கெலிடோ கடற்கரையை அண்மித்த கழிமுகத்தில் காணப்படும் மணல் மேட்டை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அக்குரஸ்ஸ பகுதியில் நில்வலா கங்கையும் பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டை சூழவுள்ள கரையோர பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

பலத்த மழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, எலபாத, கலவான, கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த பகுதிகளில் வாழ்வோரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.

இதேவேளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடலுக்கு செல்வதை தொடர்ந்தும் தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுபவர்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்