கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோருக்கு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் இரத்து

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோருக்கு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் இரத்து

எழுத்தாளர் Staff Writer

18 May, 2020 | 9:49 pm

Colombo (News 1st) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 11 பேருக்கு யாழ். நீதவான் நேற்று பிறப்பித்த இரண்டு கட்டளைகளும் இன்று (18) இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இந்த கட்டளைகளை ஆட்சேபித்து இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நகர்த்தல் பத்திரம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கடந்த சில தினங்களில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள் சமூக இடைவௌி பின்பற்றப்பட்டு சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடத்தப்பட்டதாக குறித்த 11 பேர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 11 பேர் Covid – 19 நோய் பரவுவதை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மீறி செயற்பட்டுள்ளதாக யாழ். நீதவான் நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது.

குறித்த 11 பேரையும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தி மன்றுக்கு அறிக்கையிடுமாறு யாழ். பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட குறித்த பதினொருவரும் ஒன்றுகூடல்களைத் தவிர்க்குமாறு நீதவான் நேற்று மற்றுமொரு கட்டளையையும் பிறப்பித்திருந்தார்.

Covid அபாயம் நிலவும் சூழலில் விதிமுறைகளை மீறி பொதுமக்களை ஒன்றுதிரட்டி யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தியதாக இவர்கள் தொடர்பில் யாழ். பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.

எவ்வாறாயினும் யாழ். பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி பொலிஸார் முன்வைத்த மற்றுமொரு விண்ணப்பத்தை யாழ். நீதவான் நேற்று நிராகரித்திருந்தார்.

மட்டக்களப்பில் இன்று காலை நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – கல்லடி, புதுமுகத்துவாரம் பகுதி ஆற்றங்கரையில் நினைவேந்தலை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வு நடைபெறவிருந்த இடத்தில் படையினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.

நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகச் சென்றவர்களின் விபரங்களும் இதன்போது பதிவு செய்யப்பட்டன.

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாணிக்கபுரம் கடற்கரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த மற்றுமொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் இன்று இடையூறு விளைவிக்கப்பட்டது.

ஏற்பாட்டாளர்கள் நினைவேந்தல் இடத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே பொலிஸாரால் மறிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெறவிருந்த நினைவேந்தல் நிகழ்வுக்கும் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்றிருந்த
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவை ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கியதை அடுத்து குறித்த நிகழ்வும் இடைநிறுத்தப்பட்டது.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திருக்கோவில் வல்லிபுரம் கிராமத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது திருக்கோவில் பொலிஸார் அங்கு சென்றதை அடுத்து இவ்வாறான சம்பமொன்று பதிவானது.

இதனை அடுத்து வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தினரின் இல்லத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்