இஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு

இஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு

இஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 May, 2020 | 4:44 pm

Colombo (News 1st) இஸ்ரேலுக்கான சீன தூதுவர் டூ வீ (Du Wei), Tel Aviv இல் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

57 வயதான டு வீ, அவரது கட்டிலிலிருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் கூறியுள்ளனர்.

உக்ரைனுக்கான சீன தூதுவராகக் கடமையாற்றிய டு வீ, கடந்த பெப்ரவரி மாதத்திலேயே இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவருக்கு திருமணமாகி மகன் ஒருவர் இருக்கின்ற போதிலும், குடும்பத்தினர் இஸ்ரேலில் வசித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீன தூதுவர் டு வீ தூக்கத்தில் இயற்கை மரணமடைந்ததாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பெயர் குறிப்பிடாத மருத்துவத்துவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இஸ்ரேலிய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

சீனாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதாக தூதுவராக நியமிக்கப்பட்டவுடன் அவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸைக் கையாண்ட விதத்தை சீனா மூடி மறைப்பதாகக் குற்றஞ்சுமத்திய அமெரிக்க இராஜாங்கச் செயலாளருக்கு எதிராக கடுமையான சொற்தாக்குதல்களை இஸ்ரேலுக்கான சீனத் தூதரகம் கடந்த வௌ்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்