MCC தொடர்பில் மீண்டும் சர்ச்சை: அரசின் நிலைப்பாடு என்ன?

by Bella Dalima 16-05-2020 | 9:07 PM
Colombo (News 1st) MCC உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் அதிகளவில் பேசப்படுகின்றது. MCC உடன்படிக்கை தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தௌிவுபடுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் நேற்று (15) சவால் விடுத்திருந்தார். எவ்வாறாயினும், இது குறித்தான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென அமைச்சரவை பேச்சாளர் பதில் அளிக்காதுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார். உலக பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், நாடு என்ற ரீதியில் முன்நோக்கிச் செல்ல முற்படுகையில், பாதகமான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட முயற்சித்த தரப்பினர் தற்போது சாதகமான உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
MCC உடன்படிக்கையால் இந்த நாடு பிளவடையும் என கூறப்பட்டது. ஶ்ரீ மகா போதிக்கு செல்வதற்கு அமெரிக்க விசா பெற வேண்டும் என கூறப்பட்டது. ருவன்வெலிசாயவிற்கு செல்வதற்கு அமெரிக்க விசா பெற வேண்டுமெனக் கூறினர். திருகோணமலையிலிருந்து கட்டுநாயக்க வரையிலான கடற்கரைப்பகுதி அமெரிக்காவிற்கு வழங்கப்படும் என கூறப்பட்டது. இவ்வாறான லேபிள்களை ஒட்டியே கடந்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டனர். அதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிச்சயம் கைச்சாத்திடுவார்
என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் P.ஹரிசன் தெரிவித்தார். எனினும், MCC உடன்படிக்கை தொடர்பில் எதிர்க்கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினால் பிரேரிக்கப்பட்டு கைச்சாத்திடப்படவிருந்த அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது எனவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார். காணி உரிமை தொடர்பிலான விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கும் வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தேச MCC உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார். அவர் இவ்வாறு கூறினாலும், MCC உடன்படிக்கை வேண்டாம் என கோட்டாபய ராஜபக்ஸவோ மஹிந்த ராஜபக்ஸவோ இதுவரை கூறவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டினார்.