by Staff Writer 16-05-2020 | 5:32 PM
Colombo (News 1st) மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சில வரையறைகளுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஊரடங்கு சட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும் குறிப்பிடத்தக்களவு ஆளணியை ஈடுபடுத்தி, சிற்சில வரையறைகளுடன் மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித். C.K.அழகக்கோன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வாகனப் பதிவு, சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், வாகன இலக்கத் தகடுகளை வழங்குதல், வாகனங்களைப் பரிசோதித்து அறிக்கைகளை வழங்குதல் உள்ளிட்ட திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேவை பெறுநர்கள் வார நாட்களில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை தொடர்பினை ஏற்படுத்தி திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டுமென திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திணைக்களத்தின் ஒரு நாள் சேவையும் மீள அறிவிக்கப்படும் வரை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலிலிருந்த காலப்பகுதிக்கு சலுகைக் காலமொன்று வழங்கப்பட்டுள்ளதால், அநாவசிய நெரிசல்களைத் தவிர்த்து அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களையும் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடன் செயற்படுமாறு சேவை பெறுநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திகதியை ஒதுக்கிக்கொள்ளும்போது அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் உரிய திகதிகளை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தினால் திகதியொன்று ஒதுக்கப்படுதல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் போக்குவரத்தினை மேற்கொள்வதற்கான அனுமதி என கருதக்கூடாது எனவும் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித். C.K.அழகக்கோன் தெரிவித்துள்ளார்.