கம்போடியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு 

கம்போடியாவில் கொரோனா வைரஸ் தொற்று முற்றாக ஒழிக்கப்பட்டது

by Bella Dalima 16-05-2020 | 3:51 PM
Colombo (News 1st) கம்போடியாவில் கொரோனா வைரஸ் தொற்று முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. அங்கு தொற்றுக்குள்ளான 122 பேரும் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 16.71 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட கம்போடியாவில் 122 பேர் மாத்திரமே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தனர். நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் பூச்சியத்தை அடைந்திருந்தாலும், வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாதென கம்போடிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்குமெனவும் நாட்டின் எல்லைப் பகுதிகளில் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வௌிநாடுகளிலிருந்து வருகை தருவோரிடம் கட்டாயமாக கொரோனா தொற்றில்லாமைக்கான உறுதிப்படுத்தல் சான்றிதழ் காணப்பட வேண்டுமென கம்போடிய சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அவ்வாறில்லையெனின், அவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.