மஹகமயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: ஹொரணையில் இருவர் கொலை

மஹகமயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: ஹொரணையில் இருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

16 May, 2020 | 7:16 pm

Colombo (News 1st) கட்டுநாயக்க – மஹகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நேற்றிரவு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானவர் தமது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மஹகம பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஹொரணை – அரமணாகொல்ல பகுதியிலுள்ள தொழிற்சாலை தங்குமிடத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, இரும்புக் கம்பிகளினால் மூவர் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

33 மற்றும் 53 வயதுகளையுடைய இருவரே இதன்போது உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் ஹெட்டிப்பொல மற்றும் கேகாலை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கடும் காயமடைந்த மற்றைய நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அத்துருகிரிய பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றுக்கு அருகே பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்