நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு மற்றும் வௌ்ள அபாய எச்சரிக்கை

by Staff Writer 15-05-2020 | 8:00 PM
Colombo (News 1st) மாத்தளை மற்றும் காலி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. அதற்கமைய, மாத்தளை மாவட்டத்தின் உக்குவலை பிரதேச செயலாளர் பிரிவிற்கு பூரண மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின், பத்தேகம, அக்மீமன, எல்பிட்டிய, நியாகம, போப்பே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (15) மாலை வௌ்ள அபாய எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது. கங்கைகள் மற்றும் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கே இந்த வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, களனி, களு, நில்வலா கங்கை மற்றும் மீ-ஓயா, தெதுருஓயா ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் வாழ்வோருக்கு வௌ்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.