கொரோனா தொற்று 90 வீதம் கட்டுப்படுத்தப்பட்டது - சுகாதார அமைச்சு

by Staff Writer 15-05-2020 | 2:49 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்று 90 வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பேணியமையாலேயே தொற்றுப்பரவல் நிலைமையை கட்டுப்படுத்த முடிந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். தற்போது பதிவாகும் பெரும்பாளான கொரோனா தொற்றாளர்கள் கடற்படை மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வௌிநாடுகளில் இருந்த வருகைதரும் சிலரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார். எனினும், தற்போதைய நிலையில் அசமந்தமாக செயற்படக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் சமூக இடைவௌியைப் பேணுதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார வழிமுறைகளையும் அரச மற்றும் தனியார் துறையில் தொழிலில் ஈடுபடுவோர் பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 471 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.