கொரோனாவிற்கான தடுப்பூசி குறித்து ஐரோப்பிய ஒன்றியம்

கொரோனாவிற்கான தடுப்பூசி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம்

by Staff Writer 14-05-2020 | 7:14 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கான மருந்தை ஒரு வருடத்திற்குள் கண்டுபிடிக்க முடியுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவை வெற்றிகரமாக அமைந்தால் ஒரு வருடத்திற்குள் தடுப்பூசியை தயாரிக்க முடியுமெனவும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்காக தம்மால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் ஊடுருவியதாக சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் மக்களிடையே ஏற்படும் உளநல பாதிப்பை தடுப்பதற்கு கணிசமான முதலீடு அவசியமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்தள்ளது. Covid - 19 தொற்றினால் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் , ஊரடங்கு மற்றும் வேலையின்மை உள்ளிட்ட விடயங்களால் மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுகின்றமை, தொற்று தொடர்பான பயம் மற்றும் உறவினர்களை இழக்கின்றமை, வேலைவாய்ப்பின்மை, வருமானத்தை இழந்துள்ளமை என்பன இதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் அறிக்கை ஒன்றினூடாக கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினாலும் அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகளாவிய ரீதியில் 34.3 மில்லியன் மக்கள் வறுமையை எதிர்கொள்ள நேரிடுமென சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 இலட்சத்தை அண்மித்துள்ளது. இதுவரை 298,180 பேர் உயிரிழந்துள்ளனர். 44,53,768 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 16,76,131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24,78,891 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதுடன் அவர்களில் 24,33,107 பேர் குறைந்தளவிலான அறிகுறிகளுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 45,784 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ள அமெரிக்காவில் 14,30,348 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 85,197 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள ஸ்பெயினில் 272,646 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 27,321 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாமிடத்திலுள்ள ரஷ்யாவில் 252,245 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 2,305 பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் 229,705 பேர் தொற்றுக்குள்ளான நிலையில், 33,186 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 222,104 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 31,106 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 190,137 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 13,240 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 60 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 27 ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியில் 174,098 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 7,861 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 78 ஆயிரத்து 810 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் இரண்டாயிரத்து 564 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி , பிரான்ஸ், ஜேர்மனி, துருக்கி, பெரு, கனடா ஆகிய நாடுகளில் இன்றைய நாளில் கொரொனா தொற்றுக்குள்ளானோர் அல்லது புதிய மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.