இலங்கை மத்திய வங்கியால் விசேட வழிவகைகள் அறிமுகம்

இலங்கை மத்திய வங்கியால் விசேட வழிவகைகள் அறிமுகம்

by Staff Writer 14-05-2020 | 2:30 PM
Colombo (News 1st) Covid - 19 பாதிப்பிற்கு மத்தியில் வங்கிகளின் பணப்புழக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் விசேட வழிவகைகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காசுப் பங்கிலாபங்களை அறிவித்தல், பங்குகளை மீளப்பெறல், பணிப்பாளர் சபைக்கான முகாமைத்துவப் படிகள் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற கட்டாயமற்ற கொடுப்பனவுகளை கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனிடையே, உரிமம் பெற்ற வங்கிகளினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசியமற்ற செலவீனங்கள் மற்றும் மூலதன செலவினங்களை இயலுமானவரை தவிர்க்குமாறு மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகைய அதிவிசேட வழிமுறைகளினூடாக வங்கிகள் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காக தடையற்ற கடன்களை வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.