தெய்யந்தர நீதிமன்றத்தில் தீ பரவியமை தொடர்பில் விசாரணை

by Staff Writer 13-05-2020 | 8:30 PM
Colombo (News 1st) மாத்தறை - தெய்யந்தர நீதவான் நீதிமன்றத்திற்கு எவரேனும் ஒருவரினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். தெய்யந்தர நீதவான் நீதிமன்றத்தின் வழக்குகளுடன் தொடர்புடைய பொருட்களை வைத்திருந்த பகுதியில் இன்று (13) காலை 5 மணியளவில் தீ பரவியுள்ளது. நீதிமன்றத்தின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் தீ பரவியதை அவதானித்ததை அடுத்து, நீதவான் மற்றும் தெய்யந்தர பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இன்று காலை 9.30 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்தனர். அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று பிற்பகல் விசாரணைகளில் ஈடுபட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கண்காணிப்பின் கீழ், இரண்டு குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. தீ பரவிய பகுதியில் CCTV கெமரா இல்லை என்பதுடன், நீதிமன்ற கட்டமைப்பை அண்மித்துள்ள CCTV கட்டமைப்பை கண்காணித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.