by Staff Writer 13-05-2020 | 7:18 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு நாள் தேசிய அடையாள அட்டை விநியோக சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பரீட்சை நடவடிக்கைகள், நேர்முக பரீட்சைகள், வாகன சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டைகளை விரைவில் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மேற்குறிப்பிட்ட ஆவணங்களின் தேவையுடையோர் தமது விபரங்களை கிராம உத்தியோகத்தரினூடாக உறுதிப்படுத்தி அதனை பிரதேச செயலகத்தின் அடையாள பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கேற்ப தேசிய அடையாள அட்டைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஒருநாள் தேசிய அடையாள அட்டை விநியோக சேவையை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களை தயார்செய்த அனைவரும் அதனை தமது பிரதேச செயலகத்தில் ஒப்படைக்குமாறும் திணைக்களம் கோரியுள்ளது.
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத அனைத்து பாடசாலைகளும் குறித்த விண்ணப்பங்களை பிரதேச செயலகத்திற்கோ அல்லது மாவட்ட செயலகத்திற்கோ அல்லது தலைமை காரியாலயத்திற்கோ உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.