சில நகரங்களை கேந்திரமாக கொண்ட அபிவிருத்தி திட்டம்

நாட்டின் சில நகரங்களை கேந்திரமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டம்

by Staff Writer 12-05-2020 | 4:51 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகரம் உள்ளிட்ட இலங்கையின் பிரதான சில நகரங்களை கேந்திரமாகக் கொண்டு துரித அபிவிருத்தித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கவனம் செலுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இது தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. நகர அபிவிருத்து அதிகார சபைக்கு சொந்தமான நிறுவனங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை மற்றும் துறைமுக அதிகார சபையின் உயரதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைக்கு கொண்டுசென்று பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதுடன், இதுவரை காலமும் தடைப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளார். வௌிநாடுகளில் இருந்து கடன்களை பெறாமல், முதலீடுகளால் மாத்திரம் புதிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அனைத்து திட்டங்களும் தேசிய கொள்கைகளுக்கு உடன்பட்டதாக அமைய வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனைய அபிவிருத்தியை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வௌிநாடுகளில் இருந்து வருகைதருவோரை இலக்காகக் கொண்டு அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகளை அமைத்து, வாடகை அடிப்படையில் வழங்கும் திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.