மக்களின் இயல்பு வாழ்க்கையை சீராக முன்னெடுப்பதுடன் Covid-19 தடுப்பிற்கு நடவடிக்கை - ஜனாதிபதி

by Staff Writer 11-05-2020 | 10:16 PM
Colombo (News 1st) பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தி Covid - 19 ஒழிப்பிற்காக தைரியமாக செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொற்றுநோய் ஏற்பட்டால் அதன்பின்னர் பஞ்சம் ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். Covid - 19 ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியுடன் இன்று (11) மதியம் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். கடற்படையிலும் வாழைத்தோட்டம் பகுதியிலும் எவ்வாறு அதிகளவான கொரோனா நோயாளர்கள் பதிவாகினார்கள் என்பது தொடர்பில் விசாரணைகளை ​மேற்கொள்வது தொடர்பிலும் அவர் குறிப்பிட்டுள்ளார். திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொழுது முன்னர் ஏற்பட்ட குறைபாடுகளை பாடமாகக் கொண்டு அது மீண்டும் ஏற்படாதவாறு பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். பஸ்கள், முச்சக்கரவண்டிகள், கட்டட நிர்மாணம், மெனிங் சந்தை போன்ற மக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களில் மக்களை அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் செயற்படவேண்டிய வழிமுறைகள் தொடர்பிலான சிபாரிசுகள் சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அந்த சிபாரிசுகளுக்கு ஏற்ப பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் ஊடகங்கள் மூலம் மாணவர்களை தௌிவூட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும்போது நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். வீடுகளில் தங்கியிருந்த நகர்ப்புற மக்கள் அதிகளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளமையினால் அவர்களின் தேக ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு உடற்பயிற்சி தடகளம் உள்ளிட்ட உள ஆரோக்கியத்தை பாதுகாக்கும் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.