மக்களிடம் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வேண்டுகோள்

by Staff Writer 11-05-2020 | 8:30 PM
Colombo (News 1st) தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி கப்பம் பெறுகின்றமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்படும் குற்றவியல் விசாரணைகளில் இருந்து பெயர்களை நீக்குவதாக தெரிவித்து கையடக்கத் தொலைபேசியூடான பணப் பரிமாற்ற முறைமையை பயன்படுத்தி கப்பம் பெறப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு பணிப்பாளர் ஷானிகா ஷ்ரியாநந்த தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த ​மோசடிக்காரர்களினால் 25,000 - 50,000 ரூபா வரை கப்பம் கோரப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் விசாரணைகளில் இருந்து பெயர்களை நீக்குவதாக தெரிவித்து, அச்சுறுத்தி கப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் வருமாயின் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.