நீதிமன்றம் உள்ளிட்ட அரச அலுவலக நடவடிக்கை ஆரம்பம்

நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்களின் நடவடிக்கைகள் ஆரம்பம்

by Staff Writer 11-05-2020 | 4:05 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்களின் நடவடிக்கைகள் இன்று (11) முதல் ஆரம்பிக்கப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளை இயலுமான வகையில் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் அலுவலக நடவடிக்கைகள் இன்று (11) முதல் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் அலுவலக நடவடிக்கைகளுக்காக அழைக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களில் இணையத்தளத்தினூடாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கியதாகவும் அவர் கூறினார். எதிர்காலத்தில் சிக்கலான சூழ்நிலைகள் உருவாகும் பட்சத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டு வருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.