அரச, தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறப்பு

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் நாளை முதல் கட்டுப்பாடுகளுடன் திறப்பு

by Staff Writer 10-05-2020 | 3:43 PM
Colombo (News 1st) அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் நாளை (11) முதல் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார். ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் பொதுமக்கள் வௌியே செல்வதற்காக அடையாள அட்டையை பயன்படுத்தும் விதம் சம்பந்தமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, அதிகளவில் பொதுமக்கள் வீதிகளில் ஒன்றுகூடுவதை அனுமதிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டார். அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பயணிப்பதற்காக மாத்திரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது போக்குவரத்து சேவையை தனிப்பட்ட பயணங்களுக்காக பயன்படுத்த முடியாது எனவும் அருகிலுள்ள கடைகளுக்கு நடந்துசென்று பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தொற்று பரவாத வகையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார். நாளை முதல் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தௌிவுபடுத்தினார். இதேவேளை, அரசாங்கம் என்ற வகையில் நாளை நாட்டை திறக்கும்போது இரண்டு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக வழமைக்கு கொண்டுவருவதற்கு தனியார் பிரிவை ஆரம்பிப்பது முதலாவது நோக்கம் எனவும் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு அரச செயற்பாடுகளை வலுப்படுத்துவது இரண்டாவது நோக்கம் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன், பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் சுதுவெல்ல ஆகிய பகுதிகளில் தற்போது நோயாளர்கள் பதிவாகுவதில்லை எனக் கூறிய அமைச்சர் கடந்த வாரத்தை நோக்கும் போது சமூகத்தில் இருந்து நோயாளர்கள் பதிவாகுவதில்லை எனக் கூறினார். இதேவேளை, வெலிசறை கடற்படை முகாமை தவிர வேறு சமூக பரவலின் ஊடாக இருந்து நோயாளர்கள் பதிவாகுவதில்லை. இந்த காரணங்களை அடிப்படையாக வைத்தே நாளை நாட்டை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தௌிவுபடுத்தியுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்கவும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய தம்மால் அறிமுகம் செய்துள்ள விடயங்களை மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் எனவும் அரச மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். நோயாளர்கள் பதிவாகும்போது, சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் உங்களுக்கு காய்ச்சல், தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் ஏற்கனவே அறிவித்துள்ள 30 வைத்தியசாலைகளில் ஒன்றில் அனுமதி பெறுமாறும் இல்லாவிட்டால், 1390 அல்லது 1999 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்