by Bella Dalima 08-05-2020 | 8:10 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான ஒருவரை அடையாளங்காண்பதற்காக மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை தொடர்பான சிக்கல்கள் குறித்து மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனை நிபுணர்கள் தொழிற்சங்கம் தௌிவூட்டியுள்ளது.
தேசிய வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்குள் PCR சோதனைகளை முன்னெடுக்கும் இயலுமையை மேம்படுத்தாது, சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு தான்தோன்றித்தனமாக சோதனைகளை வழங்கும் செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுவதாக மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனை நிபுணர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.
தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்ட, தேசிய வைத்தியசாலையின் தாதி மற்றும் மூன்று நபர்களின் மாதிரிகளை, சுகாதார அமைச்சின் கீழுள்ள இரசாயன கூடங்களில் மீண்டும் சோதனைக்குட்படுத்திய போது, வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டினார்.
சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களில் தவறான அறிக்கைகளை வழங்கும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகின்றன. சுகாதார அமைச்சின் கீழுள்ள எந்தவொரு ஆய்வுக்கூடத்திலும் இதுவரையில் தவறான அறிக்கைகள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் கீழுள்ள எந்த ஆய்வகங்களும் அதிகபட்ச சோதனைகளை இதுவரையில் எட்டவில்லை. இவ்வாறான நிலையில், PCR சோதனைகளை வேறு ஆய்வுக்கூடங்களுக்கு தொடர்ந்தும் சுகாதார அமைச்சு அனுப்புவதற்கான காரணம் என்ன, அதனை தீர்மானிக்கும் அதிகாரி யார், இதற்கு பொறுக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை வௌிக்கொணர வேண்டும் என்ற கோரிக்கையையும் ரவி குமுதேஷ் முன்வைத்தார்.