Colombo (News 1st) அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் தொடர்பாக ஜனாதிபதி செயலாளர் கலாநிதி P.B.ஜயசுந்தர விடுத்த அறிக்கை தொடர்பாக இன்றும் பலர் கருத்து வெளியிட்டனர்.
அது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சரவையின் இணை பேச்சாளரான பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.
பொருளாதாரம் தடைப்பட்டுள்ளதால் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் பிரதான வருமான வழிகளை இழந்துள்ளது. சுங்கம் உள்ளிட்ட திணைக்களங்களால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பாரிய வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. கலால்வரி மூலம் கிடைக்கும் பெருந்தொகை வரி இழக்கப்பட்டுள்ளது. வருமான வரித் திணைக்களத்திற்கு கிடைக்கும் பொருட்களுக்கான வரிகளை அறவிட முடியாது. இதனால் திறைசேரிக்கு நிதி வரவேண்டிய சகல வழிகளும் தடைப்பட்டுள்ளன, என பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளின் ஓய்வூதியக் கொடுப்பனவு, அரச கடனுக்காக வழங்கப்பட வேண்டிய வட்டி, சமுர்த்தி நிவாரணம் போன்றவற்றுடன் ஏனைய நிதி செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினையாக வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணை, அதற்கான வட்டியை செலுத்துதல் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மிகவும் சிரமத்துடன் அரச நிதி முகாமைத்துவம் செய்யப்படுகின்ற நிலையில், பொதுத்துறையின் தலைவரான ஜனாதிபதி செயலாளர் கலாநிதி P.B. ஜயசுந்தரவினால் ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனிப்பட்ட முறையீடு அரச பிரிவு தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
ஆகவே, எவ்விதத்திலும் அது அரசாங்கத்தின் அறிக்கை அல்லவெனவும் விருப்பமானவர்கள் இந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன விளக்கமளித்தார்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் பணியாற்றும் தேசத்தவர்களால் ஆற்றப்பட வேண்டிய கடப்பாடு ஒன்று உள்ளது. விருப்பமில்லாதவர்கள் அதனை செலுத்தாமல் இருப்பதற்கு உரிமையுள்ளது. எனவே, சேறு பூசும் செயற்பாட்டை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்
என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நிதி அதிகாரம் தொடர்பில் விவாதமேற்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் கோரியுள்ளது.