புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்ல போக்குவரத்து வசதி

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்வோருக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை

by Staff Writer 08-05-2020 | 5:19 PM
Colombo (News 1st) தூர பிரதேசங்களில் இருந்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு கிளினிக்கிற்கு வருகை தருவோருக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். புற்றுநோய் வைத்தியசாலைக்கு வருகை தருபவர்கள் போக்குவரத்து வசதிகளின்றி அசௌகரியத்திற்கு உள்ளாவதாக நோயாளர்கள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளர்கள், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வருகை தரவும் அங்கிருந்து வீடு திரும்பவும் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு துரித வேலைத்திட்டமொன்றை வகுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக நோயாளர்கள் கிளினிக்கிற்காக வருகை தருவதில் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமையினால், மேலும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.