மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் நான்காவது ஆய்வறிக்கை வெளியீடு

by Staff Writer 08-05-2020 | 9:43 PM
Colombo (News 1st)  மக்கள் சக்தி திட்டம் நாடு முழுதுமுள்ள மக்களின் துயர் துடைக்கும் திட்டமாகும். 'மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்' செயற்றிட்டத்தின் நான்காம் கட்டத்தின் ஆய்வறிக்கை இன்று முற்பகல் வெளியிடப்பட்டது. மக்கள் சக்தி செயற்றிட்டத்தின் நான்காவது ஆய்வறிக்கைக்காக கொழும்பில் அமைந்துள்ள நியூஸ்ஃபெஸ்ட் தலைமையகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு இடையில் விசேட கலந்துரையாடல் இணையத்தளமூடாக இன்று நடைபெற்றது. கடந்த வருடம் ஜூலை மாதம் 18 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கிராமங்களுக்கு பயணித்த மக்கள் சக்தி குழுவினர் மக்களின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் கலாநிதிகளும் பட்டதாரி மாணவர்களும் இத்திட்டத்தில் கைகோர்த்தனர். அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு மக்களினதும், ஏனைய நிறுவனங்களினதும் நிதி உதவியில் தீர்வு பெற்றுக்கொடுக்க மக்கள் சக்தி திட்டத்தால் முடிந்தது. இந்தத் திட்டத்தின் ஊடாக பூர்த்தி செய்யப்பட்ட பல வேலைத்திட்டங்களால் மக்கள் இன்றும் பலன் அனுபவித்து வருகிறார்கள். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் நான்காம் கட்டத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் மூலம் பேராதனை பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை தயாரித்தது. அதுவே, இன்றைய தினம் நியூஸ்ஃபெஸ்டின் கொழும்பு மத்திய நிலையம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தால் இணையத்தளத்தில் இன்று வெளியிடப்பட்டது.