துபாயில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 08-05-2020 | 7:50 PM
Colombo (News 1st) துபாயில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. துபாயிலிருந்து UL 303 விமானத்தினூடாக நேற்று (07) முற்பகல் 197 பேர் நாட்டை வந்தடைந்தனர். துபாயிலிருந்த இலங்கையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அங்கு வசித்து வந்த சிலரும் இதில் அடங்குகின்றனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்களுக்கான PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, குறித்த நோயாளி நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய தொற்று நோயியல் பிரிவிற்கு மாற்றப்பட்டார். பிலியந்தலையை சேர்ந்த 44 வயதானவரே COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். அவருடன் விமானத்தில் பயணித்தவர்கள் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கொழும்பு மத்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் COVID-19 சோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. மருதானை - டீன்ஸ் மாவத்தையை அண்மித்து வாழும் சிலர் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டதாக, கொழும்பு மத்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். அத்துடன், கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் சிலரும் அபாய வலய பகுதிகளில் கடமையாற்றும் சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் சிலரும் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பிரதேசத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.