கொழும்பில் நல்லிணக்கத்திற்கு ஓர் உதாரணம்: இந்து ஆலயத்தில் பௌத்த குரு தர்ம உபதேசம்

by Staff Writer 08-05-2020 | 9:16 PM
Colombo (News 1st) தர்ம, சமய சமரசம் மற்றும் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்கில், பௌத்த பிக்கு ஒருவர் இந்து ஆலயமொன்றுக்கு அழைக்கப்பட்டு தர்ம உபதேசம் நிகழ்த்திய அரிய நிகழ்வொன்று நேற்று (07) கொழும்பில் இடம்பெற்றது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு கிராண்ட்பாஸ் - டி வாஸ் ஒழுங்கையில் உள்ள இந்து ஆலயத்தின் பிரதம குரு மற்றும் அங்குள்ள பல்லின மக்களின் கூட்டு முயற்சியினால் இந்த அரிய நிகழ்வு சாத்தியமானது. கொழும்பு கிராண்ட்பாஸ் டி வாஸ் ஒழுங்கை பல்லின மக்களின் வாழ்விடமாகும். நாடு முடங்கியுள்ள நிலையில், டி வாஸ் ஒழுங்கையிலுள்ள அருள்மிகு ஶ்ரீ ஞான பைரவர் தேவஸ்தானம் மற்றும் பிரதேச இளவல்களின் முயற்சியினால் அங்குள்ள பெளத்த மக்களுக்கு வெசாக் பண்டிகையை எளிமையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கமைய இன, மத, மொழி,வர்க்க பேதங்களைக் கடந்து வெசாக் வௌிச்சக் கூடுகளுக்கு மாற்றீடாக , அகல் விளக்குகளை ஏற்றி புத்த பகவானின் பிறப்பு, ஞானம் அடைந்தமை மற்றும் பரிநிர்வாண முக்தியின் மகத்துவத்தை அங்குள்ள மக்கள் ஒற்றுமையாய் நினைவுகூர்ந்தனர். அதனையடுத்து, வணக்கத்திற்குரிய மாதம்பாகம அஸ்ஸஜூ தேரர் பௌத்த தர்ம சம்பிரதாயங்களுக்கு அமைய இந்து ஆலயத்தில் தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காய் உரிய மரியாதையுடன் அழைத்துவரப்பட்டார். இதன்போது, நல்லிணக்கத்தின் அன்பளிப்பாக தம்மபதம் தமிழ் மொழிபெயர்ப்பு பௌத்த பிக்குவால் இந்து ஆலய பிரதம குருவிற்கு இன்முகத்துடன் வழங்கப்பட்டது. அதனையடுத்து, தர்ம உபதேச நிகழ்வு பௌத்த பிக்குவால் இந்து ஆலயத்தில் நடைபெற்றது. டி வாஸ் ஒழுங்கை முழுவதும் ஒலிபெருக்கியின் வாயிலாக ஒலிபரப்பப்பட்ட தர்ம உபதேசத்தை அங்குள்ள பல்லின மக்களும் தமது இல்லங்களிலிருந்தபடியே செவிமடுத்தனர். இந்த அனைத்து நிகழ்வுகளிலும் சமூக இடைவௌி பேணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. பேதங்களைக் கடந்து இயற்கையின் சவாலை இலங்கையர்களாக எதிர்கொண்ட இவர்கள் வாழும் உதாரண புருஷர்கள்.