மே மாத சம்பளத்தை அர்ப்பணிக்குமாறு அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி செயலாளர் வேண்டுகோள்

by Staff Writer 07-05-2020 | 3:27 PM
Colombo (News 1st) அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர அரச ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் அவர்களது நிறுவனத் தலைவர்கள் ஊடாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவிற்காக மாதமொன்றுக்கு 100 பில்லியனுக்கும் அதிக நிதி தேவைப்படுவதாக குறித்த கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு மாத சம்பளத்தை பெறாமல் அதனை விதவைகள் கொடுப்பனவிற்கு பயன்படுத்தினால் வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை குறைக்க முடியும் எனவும் P.B.ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். இது கடன் முகாமைத்துவத்திற்கும் வரவு செலவு சுமையை மக்களிடமிருந்து குறைப்பதற்கும் உதவும் என அவர் கூறியுள்ளார். இந்த விடயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து ஊழிர்களும் தமது மே மாத சம்பளத்தை அர்ப்பணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு மாத சம்பளத்தை அர்ப்பணிக்க முடியாவிட்டால், சம்பளத்தின் ஒருபகுதி, ஒரு வார சம்பளம், அல்லது ஒரு நாள் சம்பளம் என தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்க அரச ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.