by Staff Writer 07-05-2020 | 5:53 PM
Colombo (News 1st) பல மாத உழைப்பினால் கிடைத்த அறுவடையை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மன்னார் - புதுக்குடியிருப்பு பகுதியில் சுமார் 17 ஏக்கரில் விவசாயி ஒருவர் பப்பாளி செய்கையை மேற்கொண்டிருந்தார்.
வௌிநாட்டு சந்தையை இலக்காகக் கொண்டு இந்த செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாட்டின் தற்போதைய நிலையால் ஏற்றுமதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
பப்பாளி பழத்தை உள்நாட்டிலும் விற்பதற்கான சந்தர்ப்பம் இன்றி குறித்த விவசாயி பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்.
வழமையாக ஒரு கிலோ பப்பாளிப்பழம் 100 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 30 ரூபாவிற்கு கூட விற்பனை செய்ய முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
சந்தைப்படுத்தல் வசதியின்மையால் சுமார் 4000 கிலோ பப்பாளிப்பழங்கள் மரத்திலேயே அழுகிய நிலையில் காணப்படுகின்றன.
ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு வங்கியில் கடன் பெற்று செய்கையில் ஈடுபட்டு, பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக குறித்த விவசாயி கவலை வௌியிட்டார்.