பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்

சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்: ஜனாதிபதி நம்பிக்கை

by Staff Writer 07-05-2020 | 3:20 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றினால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் ​நேற்று (06) மாலை நடைபெற்ற செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி இது தொடர்பில் கருத்து வௌியிட்டார். நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பை வழங்கும் ஆடைத்தொழில்துறை மற்றும் சுற்றுலா தொழிற்துறை ஆகியன புதிய உத்வேகத்துடன் முன்கொண்டு செல்லப்பட வேண்டும் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார். COVID-19 வைரஸைக் கட்டுப்படுத்திய நாடுகளை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட விடயங்கள் ஏனைய நாடுகளை ஈர்க்கக்கூடியதாகவும் சர்வதேச மற்றும் மேற்கத்தைய மருத்துவத்துறையின் அவதானத்தை ஈர்ப்பது தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சுகாதார சான்றிதழுடன் கூடிய விசாவை விநியோகித்து அதிகளவில் செலவு செய்யக்கூடிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலம் தங்கக்கூடிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.