நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தவறென்றால் தண்டனையை எதிர்கொள்ள தயார்: பந்துல குணவர்தன

by Bella Dalima 06-05-2020 | 9:02 PM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் தகவல்களை வௌியிட்டார். இதனையடுத்து, நிதி அதிகாரம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று (05) ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார். மங்கள சமரவீரவின் சவால் தொடர்பில் இன்று பல்வேறு தரப்பினரும் கருத்து வௌியிட்டனர். ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்தல் ஜுன் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும், தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவுள்ள புதிய திகதியை ஜனாதிபதி இதுவரை அறிவிக்கவில்லை. எப்போதோ ஒருநாள் பாராளுமன்றம் கூடவுள்ள தினத்திற்கு பின்னரும் மூன்று மாதங்களாகும் வரை நிதியை செலவிடுவதற்கு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் என்னவென மங்கள சமரவீர வினவியிருந்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதியை செலவிட்டமை தவறு என்றால், அந்த தவறுக்காக வழங்கப்படுகின்ற எந்தவொரு தண்டனையையும் எதிர்கொள்ள ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கத்தின் ஏனைய அனைவரும் தயாராக இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு ஏற்ப, 150 ஆவது சரத்திற்கு அமைய, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் நாட்டின் ஜனாதிபதி நாட்டை நிர்வகிப்பதற்கு தேவையான எந்தவொரு செலவையும் மேற்கொள்ளலாம் என்பதால், நாட்டின் அரசியலமைப்பிற்கு அமையவே அரசாங்கம் செயற்படுவதாக பந்துல குணவர்தன தெரிவித்தார். முன்னாள் நிதியமைச்சர் என்பதால், தாம் அறிந்த வகையில் இத்தகைய இடர் சந்தர்ப்பத்தில் 150/3 சரத்திற்கு அமைய, ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் மூன்று மாதங்கள் நிதியை செலவிட ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு எனவும் அதன் பின்னர் கட்டாயம் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.