முகத்துவாரம் பகுதியில் 1200 பேர் தனிமைப்படுத்தல்

மெத்சிறிபுர உயன குடியிருப்பு தொகுதியிலுள்ள 1200 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் 

by Staff Writer 05-05-2020 | 6:00 PM
Colombo (News 1st)  முகத்துவாரம் - மெத்சிறிபுர உயன குடியிருப்பு தொகுதியிலுள்ள 239 குடியிருப்புகளில் வசிக்கும் 1200-க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த குடியிருப்பு கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு நகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்தார். மெத்சிறிபுர உயன குடியிருப்பில் வசித்து வரும் 62 வயதான பெண் ஒருவரே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த பெண்ணுடன் வசித்து வந்த 6 பேரும், பெண்ணுடன் வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேரும் கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இராஜகிரிய பண்டாரநாயக்கபுர பகுதியிலுள்ள 29 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் மனோஜ் ரொட்ரிகோ தெரிவித்தார். 6 குடும்பங்களை சேர்ந்த 29 பேரும் கந்தக்காடு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பண்டாரநாயக்கபுர பகுதியில் ஒருவர் அடையாளங் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த பகுதி மூடப்பட்டுள்ளது.