by Staff Writer 04-05-2020 | 8:13 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்றது.
கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று முற்பகல் 10.30 அளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.
இதன்போது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் COVID-19 தொற்றை ஒழிப்பது தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளனர்.
COVID-19 வைரஸ் ஒழிப்பிற்காக இதுவரை சர்வதேச நிதி உதவி கிடைக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.
உலக வங்கி 127 அமெரிக்க மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு இணங்கியுள்ள போதும் இதுவரை அது கிடைக்கவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல தௌிவுபடுத்தினார்.
பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி , மஹஜன எக்சத் பெரமுன, பிலிதுரு ஹெல உருமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனைத் தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல்வேறு விடயங்கள் அடங்கிய கடிதமொன்றை அலரி மாளிகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளித்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் சந்தித்தனர்.
விஜேராமயவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது.