பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு

பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு: தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை

by Staff Writer 04-05-2020 | 4:56 PM
Colombo (News 1st) பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பிரதமரின் அழைப்பை ஏற்று இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு தீர்மானித்தமைக்கான காரணத்தை விளக்கும் வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தழிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளனர். கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏனைய அரசியல் கட்சிகளினாலும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த கோரிக்கைக்கான பதில் இதுவரை எதிர்மறையானதாகவே இருந்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸை நாட்டில் இருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஒன்றிணைந்த முயற்சிகள் தேவை என கூட்டமைப்பின் தலைவர்களது கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து தேசிய தேர்தல்களிலும் மக்கள் தமது இறைமையை பிரயோகித்து 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை நிராகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித்துறை அதிகாரங்களை உள்ளடக்கி, புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கியுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வு தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேசிய சமாதானத்தின் நலனுக்காகவும் பிராந்திய அமைதியின் நலனுக்காகவும் உலக சமாதானத்தின் நலனுக்காகவும் இவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர்களது கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் அனைத்தையும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான ஒரு முறையில் தீர்த்து வைப்பதற்கு ஆதரவை வழங்க தாம் தயார் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதற்காகவே பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தக் கூட்டம் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான ஒரு மாற்றீடாக அமையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அரசியலமைப்பு மற்றும் சட்டப் பிரச்சினைகளைக் கையாளுவதற்காக பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் எனவும் பாராளுமன்றத்தினால் மட்டுமே அவற்றைக் கையாள முடியும் எனவும் கூட்டமைப்பின் தலைவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.