Colombo (News 1st) அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக 3,170 கோடி ரூபா கடன் பெறுவதற்கு பெருந்தெருக்கள் அமைச்சிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு கடன் இதற்காக பெறப்படவுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அத்தகைய பாரிய தொகையொன்றுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை சிக்கலுக்குரியது என பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
தற்போது இவர்கள் 17 இலட்சம் பேருக்கு 5000 ரூபா வீதம் பகிர்ந்தளித்ததாகக் கூறுவதை நான் கண்டேன். COVID-19 நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள 17 இலட்சம் பேருக்கு 5000 ரூபா வீதம் வழங்குவதற்கு 850 கோடி ரூபாவே செலவாகின்றது. அப்பாவி மக்களுக்கு வழங்கப்படுகின்ற அந்தத் தொகையை விட நான்கு மடங்கு தொகையை அதிவேக வீதி ஒப்பந்தத்திற்கு திடீரென வழங்க முயற்சிக்கின்றனர். இது மிகப்பெரிய டீல். மெகா டீல். பாராளுமன்றம் இருந்திருந்தால் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கும். இன்று பாராளுமன்றத்தை மூடிவைத்து இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்
என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி வௌிப்படைத்தன்மையுடன் செயற்படுவதாகவும் அதிவேக வீதி தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஊடகங்களுக்கு தௌிவூட்டுமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை, பெத்திகட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, உத்தேச ருவன்புர அதிவேக வீதி தொடர்பிலான தமது தலையீடு குறித்து கருத்து வௌியிட்டார்.
தாங்கள் வாழ்கின்ற மலைப்பாங்கான பகுதிகளைக் குடைந்து வீதியை அமைப்பதற்கு எமது பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எஹலியகொட தேர்தல் தொகுதியிலேயே அது உள்ளடங்குகின்றது. இந்த பிரிவினுள் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொகுதி மண்சரிவு நிலவும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலை காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்காக பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கும் நான் மாற்று யோசனையை முன்வைக்க தீர்மானித்தேன். களுகங்கையுடன் காட்டுப் பகுதி ஒன்று உள்ளது. அதனூடாக இதனை நிர்மாணிக்க முடியும் என நான் யோசனையை முன்வைத்தேன். அது தொடர்பில் விரைவாக தீர்மானம் எட்டுமாறு நேற்று முன்தினம் அவரிடம் தெரிவித்தேன்.
என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.