சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைக் கோரி உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு போக்குவரத்து அமைச்சு கடிதம் அனுப்ப தீர்மானம்

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைக் கோரி உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு போக்குவரத்து அமைச்சு கடிதம் அனுப்ப தீர்மானம்

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைக் கோரி உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு போக்குவரத்து அமைச்சு கடிதம் அனுப்ப தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

03 May, 2020 | 2:37 pm

Colombo (News 1st) பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கான சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைக் கோரி, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு கடிதம் அனுப்ப போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதியின் பின்னர் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்டதன் பின்னர் , பொது போக்குவரத்து சேவையை மீள செயற்படுத்துவது தொடர்பில் நேற்று (02) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

50 ரூபாவிற்கு எரிபொருளை விநியோகித்தல், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகள் நியாயமானது என்ற போதிலும், தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தினால் இதற்கான சலுகைகளை வழங்க முடியாது எனவும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமையவே, பஸ்களின் ஆசனங்களுக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதியை வழங்குவதா? இல்லையா ? என்பது குறித்து ஆராயப்படும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்டாலும், அத்தியாவசிய ஊழியர்கள் மாத்திரமே பணிக்கு அமர்த்தப்படவுள்ளதால், அவர்களுக்கான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதேவேளை, தொழில் நிமித்தம் பொது போக்குவரத்து சேவையினூடாக அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சினால் நிறுவனத் தலைவர்களுக்கு இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவௌியுடன் பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகை தரும் நேரம் மற்றும் வேலை நிறைவடையும் நேரம் ஆகிய தகவல்களும் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்