பிரதமருடனான கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை

பிரதமருடனான கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி அறிவிப்பு

by Staff Writer 02-05-2020 | 3:00 PM
Colombo (News 1st) பிரதமரின் அழைப்பை ஏற்று நாளை மறுதினம் (04) திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லையென ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்பில் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில், ஆரம்பம் முதல் அவதானத்துடன் இருந்ததாகவும், ஜனவரி 24 மற்றும் பெப்ரவரி 5 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்து தெரிவித்ததாகவும் ஐக்கிய மக்கள் சக்தி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் நடந்துகொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றை இல்லாதொழிப்பதற்காக அரச பொறிமுறையை உரிய முறையில் பயன்படுத்துதல், இடர் முகாமைத்துவத்திற்கான பொறிமுறையை அமுல்படுத்துதல், நிவாரண நடவடிக்கைகளை அரசியல் மயமாக்காதிருத்தல், PCR பரிசோதனைகளை துரிதப்படுத்துதல், கொரோனா ஒழிப்பு செயற்பாட்டுக் குழுவிற்கு தனிநபர் பாதுகாப்பு அங்கிகளை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த யோசனைகள் தொடர்பில் அரசாங்கம் கரிசனை கொள்ளாமை குறித்து கவலையடைவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றை பொருட்படுத்தாது அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை தொடர்பில் கட்சி பேதமின்றி செயற்படுவதன் முக்கியத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதிக்கு தாம் அனுப்பிய கடிதத்தை ஆராயாது, பிரதமர் நாளை மறுதினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என ஜனாதிபதி தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமரின் இந்த அழைப்பினூடாக அவர்களுடைய இரட்டை வேடம் புலப்படுவதாகவும் அது குறித்து வியப்படைவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், பிரதமரின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதற்கான எவ்வித திட்டமும் இல்லையெனவும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் எனவும், அரச நிதி செயற்பாடுகள் மற்றும் சட்டவாக்கம் தொடர்பில் செயற்படக்கூடிய இயலுமை பாராளுமன்றத்திற்கு மாத்திரமே உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை மறுதினம் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லையென மக்கள் விடுதலை முன்னணியும் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி பாராளுமன்றத்தை மீளக் கூட்டாவிட்டால், அரசியலமைப்பு ரீதியான செயற்பாடுகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டினை கேட்டறிய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், திங்கட்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.