அரச, தனியார் நிறுவனங்களைத் திறக்க நடவடிக்கை

எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களைத் திறக்க நடவடிக்கை

by Bella Dalima 02-05-2020 | 3:23 PM
Colombo (News 1st) கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் , எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து மக்களின் அன்றாட செயற்பாடுகளையும் நிறுவனங்களையும் வழமைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் பேணும் வகையில், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களை 11 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து திறக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சேவைகளுக்கான தேவைகளை கருத்திற்கொண்டு, அதற்கான திட்டங்களை வகுக்குமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களை திறந்து வைக்கும் போது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளை முழுமையாக பின்பற்றுவதற்கு நிறுவன தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் கடமையில் அமர்த்தப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையை அவற்றின் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். தனியார்துறை நிறுவனங்கள் முற்பகல் 10 மணிக்கு திறக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநாவசியமாக ஒன்றுகூடுவதையும் வீதியில் இறங்குவதையும் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் ரயில்கள் தொழில் நிமித்தம் பயணிப்பவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்க வேண்டியவர்களைத் தவிர ஏனையவர்கள், வைரஸ் தடுப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மாத்திரமே எவரேனும் வீடுகளில் இருந்து வௌியேற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் கொரோனா ஒழிப்பிற்காக சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சாரதி மற்றும் வாகனத்தில் பயணிப்பவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மாத்திரமே பொலிஸார் வழங்கும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை மறுதினம் 4 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 6 ஆம் திகதி வரை ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு இரவு 08 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 05 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் எதிர்வரும் 06 ஆம் திகதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படுகின்ற ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணியிலிருந்து 11 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.