முன்னாள் சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதே பொருத்தமானது: ரஞ்சித் மத்துமபண்டார

முன்னாள் சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதே பொருத்தமானது: ரஞ்சித் மத்துமபண்டார

எழுத்தாளர் Staff Writer

02 May, 2020 | 7:57 pm

Colombo (News 1st) தற்போதைய சூழலில் முன்னாள் சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதே பொருத்தமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார அறிவித்துள்ளார்

அதுவே நடைமுறை சாத்தியமானது என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழைய பாராளுமன்றத்தின் 225 பேரும் வேண்டாம் என அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியாக உள்ள நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் கூட்டத்திற்கு அழைக்கும் பிரதமரின் தீர்மானம் வியப்பளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக ஆரம்பம் முதல் கவனம் செலுத்தப்பட்ட விதமும் இந்த அறிக்கையில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பங்களின்போது அரசாங்கம் உரிய முறையில் கரிசனை கொள்ளவில்லை என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, கொரோனா ஒழிப்பிற்காக அரசாங்கம் மேற்கொண்ட அநேகமான நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அறிவித்துள்ளது.

6 வாரங்களாக அரசாங்கம் சட்டத்திற்கு புறம்பான வகையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தாலும் கொரோனா தடுப்பு எனும் அத்தியாவசிய விடயத்தை கருத்திற்கொண்டு தமது தரப்பு பொறுமை காத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஊரடங்கு சட்டம் எனும் போர்வைக்குள் மறைந்து அரசாங்கம் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை கைது செய்வதற்கும் தமக்கு நெருக்கமானவர்களுக்கு ஊரடங்கு சட்ட வர்த்தக அனுமதிப் பத்திரங்களை வழங்கவும் நிவாரண செயற்பாடுகளை அரசியல்மயமாக்கவும் நடவடிக்கை எடுத்ததாக அதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

6 வாரங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு திட்டத்தில் அரசாங்கம் வெற்றிகொண்டுள்ளதைக் காண முடிகிறதா எனவும் ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

ஏனைய நாடுகள் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்காமல் முடக்க நடைமுறைகளுக்கு அமைய சில வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டாலும் இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றமை கவனத்திற்கொள்ள வேண்டிய பாரதூரமான விடயம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தப்பட்டாலும் அவர்களுக்கு தேவையான தரமான சுகாதார பாதுகாப்புக் கருவிகள் அல்லது தொற்று தொடர்பான பயிற்சி வழங்கப்படாததன் மூலம் அவர்களை உயிராபத்திற்குள் தள்ளியுள்ளமை, பாதுகாப்பு பிரிவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் மூலம் நிரூபணமாவதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு மாறாக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்பை நிபந்தனையின்றி அரசாங்கத்திற்கு வழங்குவதாக எழுத்துமூல உறுதியை கடந்த 26 ஆம் திகதி ஜனாதிபதிக்கு வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஜனாதிபதியின் தரப்பிலிருந்து பண்பற்ற முறையிலான பதில் அவரது அதிகாரி ஒருவர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் கவலையடைவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்