பரீட்சைத் திணைக்களத்தின் புதிய இணையத்தள சேவை

பரீட்சைத் திணைக்களத்தினால் புதிய இணையத்தள சேவை அறிமுகம்

by Staff Writer 30-04-2020 | 7:01 PM
Colombo (News 1st) இலங்கையில் முதல்தடவையாக பரீட்சை பெறுபேற்றை அங்கீகரித்து உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்கும் இணையத்தள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இணையத்தளத்தில் பார்த்துக்கொள்வதற்கு மேலதிகமாக இந்த சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய, இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் இந்த உறுதிப்படுத்தும் சேவை முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு இன்று (30) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையினூடாக 2001 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை நடத்தப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்கீழ் வௌிநாட்டு பல்கலைக்கழகங்கள், வௌிநாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பரீட்சை விண்ணப்பதாரிகள் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அங்கீகரித்து உறுதிசெய்யப்பட்ட ஆவணங்கள் இணையத்தளத்தினூடாக வழங்கப்படவுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக விண்ணப்பதாரர்கள் தமது பெறுபேற்றை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.