சடலங்களை பொதியிடும் பைகள் இறக்குமதி: விளக்கம்...

சடலங்களை பொதியிடும் பைகளின் இறக்குமதி குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விளக்கம்

by Staff Writer 27-04-2020 | 2:25 PM
Colombo (News 1st) சடலங்களைப் பொதியிடும் பைகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கோரியமைக்கான காரணம், கையிருப்பை பேணுவதற்காகவே என சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதனைத் தவிர, அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் சம்பவிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அல்லவெனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்கள் குறைவடைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கொரோனா தொற்று பரவாதிருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அவசியமான தொழில்நுட்பத் தேவைகளுக்காக சடலங்களைப் பொதியிடும் பைகள், மருந்து வகைகள் மற்றும் வைத்திய உபகரணங்களைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியமெனவும் டொக்டர் அனில் ஜாசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இவற்றின் கையிருப்பைத் தொடர்ந்து பேணுவதற்கான சந்தர்ப்பத்தைச் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வழங்கியுள்ளதுடன், அதனைப் பயனுள்ளதாக்குவதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் அறிவுறுத்தியுள்ளார்.