கட்சித் தலைவர்களின் தயாரிப்பிலான ஆவணம் கையளிப்பு

கட்சித் தலைவர்களின் தயாரிப்பிலான ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Staff Writer 27-04-2020 | 5:19 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தை கலைத்து மார்ச் 2 ஆம் திகதி விடுத்த உத்தரவை மீளப் பெறுமாறு 7 கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மீளப் பெற முடியாவிட்டால் அரசியலமைப்பில் இருக்கும் அதிகாரங்களின் பிரகாரம், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்கும் யோசனையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, இரா. சம்பந்தன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன் ஆகிய கட்சித் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அந்தக் கடிதத்தை இன்று பிற்பகல் ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிசெய்தார். கடந்த வாரம் வரை கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை துரதிஷ்டவசமாக தற்போது தளர ஆரம்பித்துள்ளதாக, பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்கும் இந்த ஆலோசனை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நோய்த் தொற்றின் பரவலை அடுத்த சில வாரங்களுக்குள் கட்டுப்படுத்த முடியாது போனால் பொருளாதார, சமூக, அரசியல் தளங்களில் நாடு பல இடர்களை சந்திக்க நேரிடும் என ஏழு கட்சிகளின் தலைவர்கள் தமது கூட்டறிக்கையில் எச்சரித்துள்ளனர். சுகாதார ஊழியர்கள் மக்களை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்போடு ஆற்றும் சேவை அரசியல் தீர்மானங்களால் வீண்போகக்கூடாது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவும் அடுத்த 2 மாதங்களுக்குள் நீதியும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தும் சூழல் ஏற்படும் என்பதை நியாயமாக எதிர்பார்க்க முடியாது எனவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்டி அரசியல் கட்சிகளினதும் பராளுமன்ற உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பைப் பெறுவதன் மூலம் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்பது ஏழு கட்சிகளின் தலைவர்களினதும் நிலைப்பாடாகும். பிரச்சினையை எதிர்கொள்வதற்கு தேவையான புதிய சட்டங்களை அமுல்படுத்துவது, பொது நிதியை அரசாங்கத்தின் செலவுக்காக பயன்படுத்திக்கொள்வதற்கு பாராளுமன்ற அனுமதியைப் பெறுவது இதன் பிரதான விடயமாகும். பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு இருக்கும் பொறுப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளிக்கும் ஏழு கட்சித் தலைவர்களும் இந்தக் காலத்தில் தமக்கு சம்பளம் வேண்டாமென ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர். அரசாங்கத்தை கவிழ்க்க முனைய மாட்டோம் என்பதுடன் அரசாங்கத்தின் எந்த சட்டபூர்வமான நடவடிக்கைக்கும் தடை விதிக்கப் போவதில்லை எனவும் மக்களுக்கு கட்சித் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஊரடங்கு சட்டம் சட்டபூர்வமாக பிரகடனப்படுத்தப்படாத போதிலும் அதைப் பேணுவதில் அரசாங்கத்துக்கு உதவி வருவதன் மூலம் தமது நல்லெண்ணத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதிக்கு நினைவுகூர்ந்துள்ளனர். ஏனைய ஜனநாயக நாடுகளைப் போலவே எமது நாடும் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கல்துறை, நீதித்துறை என்ற 3 தனித்துவமான அதிகாரங்களைக் கொண்ட நிறுவனங்களால் ஆளப்படுவதாக தெரிவிக்கும் கட்சித் தலைவர்கள், சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு இந்த மூன்று துறைகளும் இன்றியமையாதவை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கலைக்கப்பட்ட உத்தரவை மீளப்பெற முடியாவிட்டால் அரசியலமைப்பின் 70 (7) ஆவது உறுப்புரையின் கீழ் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்கும் யோசனையாக முன்வைக்கப்படும் இந்தக் கடிதம் எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் இதய சுத்தியோடு நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக தயாரிக்கப்பட்டது எனவும் ஏழு கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.