மேலும் 113 மாணவர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து மேலும் 113 மாணவர்கள் நாடு திரும்பினர்

by Staff Writer 26-04-2020 | 2:54 PM
Colombo (News 1st) இந்தியாவிலிருந்து மேலும் 113 இலங்கை மாணவர்கள் இன்று (26) தாயகம் திரும்பியுள்ளனர். மாணவர்களை அழைத்துவருவதற்காக விசேட விமானம் ஒன்று கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாணவர்களுடன் புறப்பட்ட விமானம் நண்பகல் 12.15 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள மாணவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி கண்காணிக்கவுள்ளதாகவும் அவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அத்மிரல் ஜயனாத் கொலம்பகே கூறினார். இதேவேளை, இந்தியாவில் சிக்கியுள்ள ஆயிரம் மாணவர்களையும் பங்களாதேஷிலுள்ள 80 மாணவர்களையும் கட்டம் கட்டமாக நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான நி​லையங்களில் சிக்கியிருந்த 34 இலங்கைப் பிரஜைகளில் 20 பேர் இதுவரை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். துபாய், மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து அவர்கள் மீள திரும்பியுள்ளதாக அத்மிரல் ஜயனாத் கொலம்பகே கூறியுள்ளார். சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியிருந்த நிலையில் நாடு திரும்பிய அனைவரும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.