வாகன இறக்குமதியாளர்களிடம் வேண்டுகோள்

வாகன இறக்குமதியாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

by Staff Writer 25-04-2020 | 3:11 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திலுள்ள 5000 இற்கும் அதிகமான வாகனங்களை உரிய நடைமுறையின் கீழ் அகற்றுமாறு, வாகன இறக்குமதியாளர்களிடம் துறைமுக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்தியவசிய சேவைக்காக துறைமுக வளாகத்தை தயார்நிலையில் வைத்திருக்குமாறு அரசாங்கம் வழங்கிய உத்தரவிற்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. துறைமுகத்திலிருந்து அகற்றப்படும் வாகனங்களுக்காக, மார்ச் 16 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் தாமதக் கட்டணம் அறவிடப்பட மாட்டாது என துறைமுக அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனபடிப்படையில் 6,500 இற்கும் மேற்பட்ட வாகனங்களில் இதுவரை ஆயிரம் வாகனங்களே துறைமுக வளாகத்திலிருந்து உரிய முறையின் கீழ் அகற்றப்பட்டுள்ளன. 24 மணித்தியாலங்கள் செயற்படும் துறைமுக செயற்பாடுகள் ஊடாக இம்மாதம் இறுதி வரை வாகனங்களை அகற்ற முடியும் என ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், தாமதக் கட்டணத்தை அறவிடாதிருப்பதற்கான சலுகைக் காலம் ஏப்ரல் 30 ஆம் திகதியின் பின்னர் நீடிக்கப்பட மாட்டாது என ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரிகள் கூறியுள்ளனர்.