by Chandrasekaram Chandravadani 25-04-2020 | 3:50 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கான அழைப்பை சீனா நிராகரித்துள்ளது.
கொரோனா தொற்றின் ஆரம்பம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென அவுஸ்திரேலியாவால் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள உலக சுகாதார தாபனத்தின் வருடாந்த கூட்டத்தொடரில் இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தப்படுமென அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் தமது நாடு அனுமதியளிக்கப் போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது.
அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் இத்தகைய விசாரணைகளை தாம் ஏற்கப்போவதில்லை எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் அதன் ஆரம்பகட்ட பரவலாக்கம் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அதனூடாக தொற்றை இல்லாதொழிப்பதற்கான இயலுமை, ஏனைய நாடுகளுக்கு கிட்டுமென பிரித்தானியாவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் பிற்பகுதியில் சீனாவின் வுஹான் நகரில் உள்ள வனவிலங்கு சந்தை ஒன்றிலிருந்து இந்த வைரஸ் தோன்றியதாக கருதப்படுகின்றது.
இந்நிலையில், Covid-19 தொற்று தொடர்பில் சீனா தவறான தகவல்களை பரப்புவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றினூடாக குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அயல் நாடுகள் மீது ரஷ்யாவும் சீனாவும் இலக்கு வைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று தொடர்பில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல முறை விமர்சித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்கத்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சீனாவிலுள்ள மிசோரி மாநில அரசாங்கத்தாலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.