by Staff Writer 25-04-2020 | 2:47 PM
Colombo (News 1st) இன்று (25) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 350 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 37,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுவரை 10,000 இற்கும் அதிகமான வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் நேற்றிரவு முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா தளர்த்துவதா என்பது தொடர்பில் பொதுமக்களின் நடவடிக்கைகளை கொண்டே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களில் Covid-19 பரவலை கட்டுப்படுத்தும் விடயத்தில் பொதுமக்கள் முறையான ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பது புலப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நோயை மறைக்கும் செயற்பாடுகளில் அநேகமானோர் ஈடுபடுவதை தம்மால் அவதானிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அறிகுறிகளுடன் நோயாளர்கள் எவரும் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
தனிமைப்படும் ஊரடங்கு சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரையும் செயலாற்றுமாறும் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நேற்றிரவு 8 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், ஆகிய மாவட்டங்களிலும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி, கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஆகியவற்றில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்ப்டடுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் நேற்றிரவு 8 மணி முதல் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளது.