வெலிசறையில் மேலும் 30 கடற்படை வீரர்களுக்கு கொரொனா தொற்று: சுமார் 4000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

by Staff Writer 24-04-2020 | 9:42 PM
Colombo (News 1st) வெலிசறை கடற்படை முகாமை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், பொலன்னறுவையைச் சேர்ந்த கடற்படை உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் கடமையாற்றிய, தங்கியிருந்த மற்றும் தொடர்பைப் பேணிய அனைவரும் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாக கடற்படையினர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமிலுள்ள 194 வீடுகளில் தங்கியுள்ள சுமார் 4000 பேர், முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சேவையாற்றி தற்போது விடுமுறையிலுள்ள கடற்படை உறுப்பினர்களில், தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மீள முகாமிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாம் வீரர்கள் நடமாடிய அம்பாறை மாவட்டத்தின் உஹன, தமன ஆகிய 3 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 4 கிராமங்களுக்குள் பிரவேசிப்பதும், வௌியேறுவதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரஜவெவ, மடவலந்த, பஹலலந்த, நவகிரியாவ ஆகிய கிராமங்களுக்குள் பிரவேசிக்கவும் வௌியேறவுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு வசிப்போர் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே வீடுகளிலிருந்து வௌியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வெலிசறை கடற்படை முகாம் வீரர் ஒருவர் பொலன்னறுவைக்கு பயணித்த சந்தர்ப்பத்தில் அவர் பயணித்த லொறியின் இரண்டு சாரதிகளும், உதவியாளர்கள் இருவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் இன்று​ PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நால்வர் புனானை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவர்கள் தங்கியிருந்த ஹிங்குராங்கொட பிரதேசத்தின் வீடுகள் அமைந்துள்ள பகுதியில் இன்று தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர பிரதேச செயலகத்திற்குட்பட்ட 12 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறித்த கடற்படை வீரர் பழங்களை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் பொலன்னறுவை மணிக்கூட்டு கோபுரத்தை அண்மித்து வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அந்த பகுதியில் தொற்று நீக்கும் நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றது. வாரியபொல பிரதேச சபையின் ஊழியர் ஒருவர், வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான வீரரின் வீட்டை அண்மித்த பகுதியைச் ​சேர்ந்தவர் என்பதன் காரணமாக அந்தக் கட்டத் தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டது. இதேவேளை, வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வருகை தந்த கொரோனா தொற்றுக்குள்ளானவர் என உறுதிப்படுத்தப்பட்ட பண்டுவஸ்நுவர - ரத்னடுவ பிரதேசத்தின் கடற்படை வீரரின் மனைவி மற்றும் பிள்ளைகள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த தரப்பினர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். இதனிடையே இறக்குவானை - ஹொரமுல்ல, ஹெலஉட சமன் மாவத்தையில் 7 குடும்பங்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டன. இதேவேளை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை அறை இன்று தற்காலிகமாக மூடப்பட்டு தொற்று நீக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. வெலிசறை கடற்படை முகாமிலிருந்து விடுமுறையில் சென்ற கடற்படை வீரர் ஒருவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த தனது மகனை பார்க்க சென்றதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, மஹியங்கனை - தலாவேகம பிரதேசத்தில் 7 குடும்பங்கள் இன்று சுயதனிமைக்குட்படுத்தப்பட்டன. வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வருகை தந்து குருநாகலிலுள்ள தமது வீட்டில் தங்கியிருந்த வீரரின் உறவினர் ஒருவர் குறித்த பகுதிக்கு சென்றதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமிலிருந்து விடுமுறை பெற்று வந்த காலியிலுள்ள 5 கடற்படை வீரர்கள் இன்று PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதேவேளை, கண்டி ஆளுநர் அலுவலகம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டது. கண்டி ஆளுநர் அலுவலகத்தில் சேவையாற்றும் ஊழியர் ஒருவர் வெலிசறை கடற்படை முகாம் வீரர் ஒருவருடன் நெருங்கிப் பழகிய நிலையில் இன்று பணிக்கு சமுகமளித்ததை அடுத்தே அந்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.