கொரோனா தொற்றை சாதாரண காய்ச்சலாகக் கருத வேண்டாம்: உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட பிரதிநிதி வலியுறுத்தல்

by Staff Writer 24-04-2020 | 8:55 PM
Colombo (News 1st) COVID-19 எனப்படும் கொரோனா தொற்றுக்கு எதிரான சவாலை சமூகம் ஒன்றிணைந்து எதிர்கொள்வது மற்றும் இந்த இக்கட்டான நிலையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் COVID-19 தொடர்பான விசேட பிரதிநிதி டேவிட் நெபரோ (David Nabarro) தௌிவுபடுத்தியுள்ளார். BBC உலக சேவையின் நேர்காணலில் அவர் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது,
எனக்கு தெரிந்த வரையில், சகல வேலைகளும் முடக்கப்பட்டுள்ளதால், இந்த காலத்தில் வைரஸ் தொற்று குறைவடைந்துவிடும் என்று சிந்திக்க முடியாது. நாம் இதனை முழுமையாகக் கட்டுப்படுத்தாமல் சகலவற்றையும் திறக்கும் போது வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரிக்கும். நான் உண்மையில் வருத்தமடைகிறேன். சில வறிய நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் அந்த வறிய நாடுகள் சுகாதார ரீதியாக பின்தங்கியுள்ளன. இந்த நாடுகள் சகல பணிகளையும் முடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதனால் மக்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் ஜனவரி 14 ஆம் திகதி ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து இந்தத் தொற்று எந்தளவிற்கு அபாயகரமானது என்பதை விளக்கியது. அன்றிலிருந்து இதனை தொடர்ந்து வருகிறோம். இதனை பாரதூரமாக கவனத்தில் கொள்ளுங்கள். உடனடியாக செயற்படுங்கள். தொற்று நோயாளர்கள் தமது நாட்டில் பதிவானதும் அதனை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டாம். இதனை சாதாரண காய்ச்சலாகக் கருத வேண்டாம். காய்ச்சலுக்கான சிகிச்சையை இதற்கு வழங்க வேண்டாம். இந்த அறிவுறுத்தல்களை ஜனவரி மாதத்திலிருந்து உலக சுகாதார ஸ்தாபனம் பகிரங்கமாக கூறிவருகின்றது.