அமெரிக்காவில் இரண்டு பூனைகளுக்கு COVID-19 தொற்று

அமெரிக்காவில் இரண்டு பூனைகளுக்கு COVID-19 தொற்று

by Bella Dalima 23-04-2020 | 5:50 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் நியூயோர்க்கில் இரண்டு பூனைகளுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பூனைகளுக்கும் இலேசான சுவாசப் பிரச்சினை இருப்பதாகவும், அவை விரைவில் குணமடையும் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தான் அமெரிக்காவில் செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது. குறித்த பூனைகள் இரண்டும் வெவ்வேறு வீடுகளில் வளர்க்கப்படுபவை. எனினும், அமெரிக்காவில் கொரோனா வைரஸை பரப்புவதில் செல்லப்பிராணிகள் பங்கு வகிப்பதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நியூயோர்க்கில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் உள்ள சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. சுவாசப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்ட முதல் பூனைக்கு தொற்று இருப்பதாக கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார். எனினும், பூனை வசிக்கும் வீட்டைச் சேர்ந்த எவருக்கும் COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. பூனைக்கு வௌி நபர்கள் மூலமாகவோ, இலேசான அல்லது அறிகுறிகள் தென்படாத வீட்டில் உள்ள தொற்றாளர் ஒருவர் மூலமாகவோ COVID-19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர் கூறியுள்ளார். இதேவேளை, சுவாசப் பிரச்சினையை எதிர்கொண்ட இரண்டாவது பூனைக்கு அதனை வளர்ப்பவரிடம் இருந்து தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. எனினும், அதே வீட்டில் உள்ள மற்றொரு பூனைக்கு தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.