ஊரடங்கு உத்தரவை மீறியோரிடம் 2 கோடி அபராதம் அறவீடு

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடமிருந்து ஒரே நாளில் 1 கோடியே 20 இலட்சம் அபராதம் அறவீடு

by Bella Dalima 23-04-2020 | 5:26 PM
Colombo (News 1st) தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறியமைக்காக ஒரே நாளில் சுமார் 1 கோடியே 20 இலட்சம் இந்திய ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரையான காலப்பகுதியில் ஊரடங்கை மீறிய 2,85,150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறிப் பயணித்த 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியதற்கான அபராதமாக இதுவரை 2 கோடியே 68 இலட்சம் இந்திய ரூபா அறவிடப்பட்டுள்ளது. நேற்று வரை 1 கோடியே 46 இலட்சம் இந்திய ரூபா அபராதம் பெறப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் இன்று வரையான ஒரே நாளில் ஒரு கோடியே 20 இலட்சம் இந்திய ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தமிழகத்தில் தொழிற்சாலைகளை மீள இயங்க அனுமதிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்திலுள்ள தொழிற்சாலைகள் சிலவற்றை படிப்படியாக மீள இயங்க அனுமதிப்பது குறித்தும் தொழிலதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி தொழில்நுட்பத்தினூடாக இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.